ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.
இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.
முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களும் குவிந்து விட்டனர்.வழக்கை விசாரித்த பெஞ்ச், அதை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து 8 வார இடைக்காலத் தடையை அறிவித்தது.
உற்சாக வெள்ளத்தில் ஸ்தம்பித்தது உயர்நீதிமன்றம்இதைக் கேட்டதும் வக்கீல்கள் உற்சாகக்குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த வரலாறு காணாத மிகப் பெரிய வக்கீல்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமும் பூரிப்பில் மூழ்கியது.அனைவரும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து முழக்கமிட்டதால் உயர்நீதிமன்றமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்
தூக்குத் தண்டனை 8 வாரங்குக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சி முழக்கமிட்டும் சந்தோஷத்தைப் பகிர்நது கொண்டனர்.
பொதுமக்களும் மகிழ்ச்சி
பொதுமக்களுக்கும் இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம். இது நியாயமற்றது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?
முன்னதாக தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் நேற்று வழக்கறிஞர் தடா சந்திரசேகர் ரிட் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அந்த மனுக்களில், 1991-ல் கைது செய்யப்பட்ட நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம்.
எங்களுக்கு தூக்கு தண்டனை விதித்து 1998 ஜனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனை உறுதி செய்து 1999 மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு தமிழக ஆளுநருக்கு நாங்கள் 2 முறை அளித்த கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.இதன் தொடர்ச்சியாக 26.4.2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். எனினும், எங்கள் மனு மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்து கடிதம் எழுதினோம். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் இம்மாதம் 12-ம் தேதி எங்கள் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் 9-ம் தேதி நாங்கள் தூக்கிலிடப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம்.இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.மேலும், கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன.இந்நிலையில், நாங்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு அதன் முடிவு தெரியாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்தோம். வாழ்வோமா, சாவோமா எனத் தெரியாமல் 11 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாங்கள் தனிமைச் சிறையில் தவித்த தவிப்பும், அனுபவித்த சித்திரவதையும் மரண தண்டனையை விடவும் மிகக் கொடுமையானது.ஆகவே, 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
காப்பாற்ற முடியும்-ராம்ஜேத்மலானி:முன்னதாக உயர்நீதிமன்றத்திற்கு வந்த ராம்ஜேத்மலானியிடம் செய்தியாளர்கள் வழக்கின் தன்மை குறித்து கேட்டபோது, இது மிகவும் சவாலான வழக்கு. இருப்பினும் திறமையாக வாதாடினால் நிச்சயம் மூவரையும் காப்பாற்ற முடியும். காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் கருணை மனுக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் 3 பேரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காஞ்சீபுரம் அருகே செங்கொடி என்ற பெண், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளித்து இறந்தார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அட்டவணைபுதூரை சேர்ந்தவர் பில்லாமணி (வயது 44). வெல்டிங் வேலை செய்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
இவர் நேற்று மதியம் மண்எண்ணெய் கேனுடன் பூனாச்சி பஸ் நிறுத்தம் அருகே வந்தார். அப்போது அவர், திடீர் என்று மண்எண்ணெய்யை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று கோஷங்களை எழுப்பியவாறு அங்கும் இங்கும் ஓடினார்.
இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர். பிறகு அவர்கள் பில்லாமணியின் உடலில் எரிந்த தீயை அணைத்து விட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாயில் அருகில் அமர்ந்து மறியல் செய்தனர்.
அப்போது கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் பாலு, மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோபி, மகளிர் அணி பிரமுகர் புவனா ஆகியோர் திடீர் என மறைத்து கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தலையில் ஊற்றிக்கொண்டே நடுரோட்டுக்கு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து உடலில் தீ வைத்துக்கொள்ள விடாமல் தடுத்தனர். ஆனாலும் அவர்கள் நடுரோட்டுக்கு வந்து ஆவேசமாக கோஷம் போட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஓடி வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தின் கதவுகளை போலீசார் இழுத்து மூடி பாதுகாப்புக்கு நின்றனர்.
இதனை தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியினர் வெளியே நின்று கோஷம் போட்டனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களில் 35 பேரை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்த பகல் 12 மணிக்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது, மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு எதிரே உள்ள மெட்ரோபாலிட்டன் ஓட்டலுக்குள் மாணவர்கள் ஞானதேசீககலைஞன், ராம்கி ஆகியோர் புகுந்தனர். அவர்கள் மொட்டை மாடிக்கு சென்று முருகன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யாவிட்டால் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்தனர்.
இதை தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற மாணவர்களிடம் மதுரை கலெக்டர் சகாயம், போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், மதுரை வக்கீல் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி, தமிழ்நாடு வக்கீல்கள் சங்க மாநில செயலாளர் ஆர்.வெங்கடேசன், இணை செயலாளர் எஸ்.முத்துக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது, மாணவர்களின் கோரிக்கை அரசுக்கு எடுத்து சொல்லப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து மாணவர்கள் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.
திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது 3 பேர் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதையடுத்து அக்கட்சியை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட லிபிய அதிபர் கடாபி தனது பெண் மெய்க்காப்பாளர்கள் 5 பேரை பாலியல் பலாத்காரம் செய்ததுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து சன்டே டைம்ஸ் ஆப் மால்டாவில் கூறப்பட்டுள்ளதாவது,
பதவியிறக்கப்பட்ட லிபிய அதிபர் கடாபியின் முன்னாள் பெண் மெய்க்காப்பாளர்கள் 5 பேர் பெங்காஸியைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் செஹாம் செர்கிவாவிடம், கடாபியும், அவரது மகன்களும் தங்களை போதும் என்ற அளவுக்கு அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
செர்கிவா இந்த வாக்குமூலங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளார். சர்வதேச நீதிமன்றம் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி உள்ளிட்டவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவர்கள் மீதுள்ள போர்க்குற்ற புகார்கள் குறித்து விசாரிக்கையில் இந்த வாக்குமூலத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அதில் ஒரு பெண் மெய்க்காப்பாளரை மிரட்டி அந்த வேலையில் சேரவைத்துள்ளனர். அந்த பெண்ணின் சகோதரர் போதைப் பொருள் கடத்தையில் சிக்கிக் கொண்டதாகவும், அவர் உடனே கடாபியின் மெய்க்காப்பாளர் ஆகாவிடில் அவரது சகோதருக்கு சிறை வாசம் என்று மிரட்டியுள்ளனர். சகோதரனைக் காப்பாற்ற அந்த பெண் கடாபியின் மெய்க்காப்பாளர் ஆகியுள்ளார்.

பெண் மெய்க்காப்பாளர்களை முதலில் கடாபி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு பிறகு அவரது மகன், அடுத்து உயர் அதிகாரிகள் என்று பலர் பலாத்காரம் செய்துள்ளனர்.
லிபியாவில் கலகம் வெடித்தபோது கடாபி ஆதரவு வீரர்கள் செய்த பாலியல் பலாத்காரங்கள் குறித்து மனோதத்துவ நிபுணர் செர்கிவா விசாரணை நடத்தி வருகிறார்.
1970களில் இருந்து அன்மை காலம் வரை எப்பொழுதுமே கடாபியை சுற்றி அமேசானியன் கார்ட் என்று அழைக்கப்படும் அவரது பெண் மெய்க்காப்பாளர்கள் இருப்பார்கள். அவர்கள் இராணுவ உடை அணிந்து, முழு அலங்காரத்துடன் தான் காணப்படுவார்கள்.
கடாபியைக் காப்போம் என்று 30 பெண் மெய்க்காப்பாளர்கள் சபதம் எடுத்திருந்தனர். அவர்கள் கடாபியை நிழல் போன்று தொடர்வார்கள். 1998-ம் ஆண்டு கடாபி மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஒரு பெண் மெய்க்காப்பாளர் பலியானார், இருவர் படுகாயம் அடைந்தனர்.
லிபிய போராளிகளை எதிர்த்து சண்டையிட பெண் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக கடாபியின் ஆதரவாளர் கடந்த ஜூன் மாதம் தெரிவி்த்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக