வெள்ளி, 2 செப்டம்பர், 2011

02.09.2011 இன் சிறப்பு செய்திகள்.


பணிப்பெண்ணின் மீது வெந்நீரை ஊற்றி கொடுமை செய்த கடாபியின் மருமகள் (பட இணைப்பு)

                                                              
லிபிய தலைவர் கேணல் கடாபியின் மகனது மனைவி அலைன் கடாபியால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணொருவர் தொடர்பான விபரங்கள் சர்வதேச ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

எதியோப்பியாவிலிருந்து வேலைவாய்ப்புப் பெற்று ஒரு வருடத்திற்கு முன் லிபியாவுக்கு வந்த ஷவேகா முல்லாஹ் என்ற மேற்படி பெண், கடாபியின் மகன் ஹனிபால் கடாபியின் மனைவி அலைன் கடாபியிடம் பணிக்கு நியமிக்கப்பட்டார்.



அவருக்கு ஹனிபால் கடாபியின் சின்னஞ்சிறு மகனையும் மகளையும் பாராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. முதல் 6 மாத காலமும் ஷவேகா முல்லாஹ்ஹை நல்ல முறையில் நடத்திய அலைன், பின்னர் அவரை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்.
தனது சின்னஞ்சிறு மகள் அழுது அடம்பிடித்தால் சினமடைந்துவிடும் அலைன், குழந்தையின் அழுகையை நிறுத்த தவறியமைக்காக ஷவேகா முல்லாஹ் மீது கொதி நீரை ஊற்றியுள்ளார். இந்நிலையில் ஷவேகா முல்லாஹ் கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அதன்பின் 3 மாதங்கள் கழித்து இதையொத்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அலைன், ஷவேகா முல்லாஹ்ஹை குளியலறைக்கு இழுத்துச்சென்று அவரது கைகளையும் கால்களையும் கட்டி வாயை அடைத்துவிட்டு கொதிக்கும் நீரை தலை மீது கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சித்திரவதை செய்துள்ளார்.
இத்தாக்குதலையடுத்து ஷவேகா முல்லாஹ்ஹின் தலையில் புண் ஏற்பட்டு புழுக்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் எவரும் பார்க்காத வண்ணம் ஷவேகாவை மறைந்திருக்க அலைன் கட்டாயப்படுத்தியுள்ளார்.

எனினும் காவலர் ஒருவர் ஷவேகாவின் நிலையை கண்டு பரிதாபப்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் பங்களாதேஷை சேர்ந்த அக்காவலரை சிறையில் அடைக்கப்போவதாக அலைன் அச்சுறுத்தியுள்ளார். அக் காவலரும் பல தடவைகள் தாக்கப்பட்டு காயத்துக்கு உள்ளாகியுள்ளார்.
தனக்கு தெரியாமல் சிகிச்சை பெற்றதற்கு தண்டனையாக அலைன், ஷவேகாவை 3 நாட்களாக வசிப்பிடத்துக்கு வெளியே குளிரில் உணவும் உறக்கமுமின்றி இருக்க வைத்துள்ளார்.
                                                                                   
தனக்கு உணவு அளிக்க மறுத்த அலைன், தான் பார்த்துக் கொண்டிருக்க நாய்களுக்கு உணவளித்ததாக ஷவேகா கூறினார். தான் கடாபியின் குடும்பத்துக்காக பணியாற்ற ஆரம்பித்த இந்த ஒரு வருட காலத்தில் தனக்கு ஒரு சதமும் ஊதியமாக வழங்க வில்லை என அவர் தெரிவித்தார்.


அந்தமான் தீவுகள் அருகே மீன்பிடி படகு தோற்றத்தில் சீன உளவுக்கப்பல்.

மீன்பிடி இழுவைப் படகு போன்று வடிவமைக்கப்பட்ட சீன உளவுக் கப்பல் ஒன்று இந்தியாவைக் கண்காணித்து விட்டு சிறிலங்காவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிய அந்தமான் கரைக்கு அப்பால் இந்த சீன உளவுக்கப்பல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய ரேடர்களில் சிக்குவதற்கு முன்னர்- முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரதேசத்தில் குறிப்பிட்ட சீன உளவுக்கப்பல் சுமார் 20 நாட்கள் வரை தரித்து நின்று வேவு பார்த்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சந்தேகத்துக்கிடமான அந்தக் கப்பலை சீன உளவுக்கப்பல் என்று உறுதி செய்து கொண்ட இந்தியக் கடற்படை உடனடியாக அந்த இடத்துக்கு போர்க்கப்பல்களை அனுப்பியது. அதற்குள் அந்த சீன உளவுக்கப்பல் அனைத்துலக கடற்பரப்புக்குள் சென்று விட்டதால், இந்தியக் கடற்படையால் எதுவும் செய்ய முடியாது போனது. எனினும் சீன உளவுக்கப்பல் சிறிலங்கா கடற்பரப்புக்குள் சென்று மறையும் வரை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்து சென்றுள்ளது. தப்பிச் சென்ற சீன உளவுக்கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சீன உளவுக்கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் இருக்கலாம் என்று இந்தியக் கடற்படை நம்புகிறது. இந்தக் கப்பல் இந்து சமுத்திரத்தில் நீர்மூழ்கி மற்றும் விமானம் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான தரவுகளைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று இந்திய அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்தக் கப்பலில் உள்ள ஆய்வு கூடங்களில் இருந்து இந்து சமுத்திரத்தில் வெவ்வேறு இடங்களின் நீரின் ஆழம், வெப்பநிலை, கடலடித்தன்மை போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இவை ரோபிடோக்களை பயன்படுத்துவதற்கு முக்கியமானவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா பாரிய விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கட்டி வருகிறது. இதன் கட்டுமானப்பணிகள் 2017இல் முடிவடையவுள்ள நிலையில், அதற்கு இந்தத் தரவுகள் தேவைப்படலாம் என்றும் கருதப்படுகிறது. சீனக் கடற்படை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது பலத்தைப் பெருக்கி வருவது இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளதாகவும், இந்திய ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.
சங்குதீர்த்தக்குளத்தில் சங்கு உருவாகும் வரலாறு குறித்து திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் கோ.சரவணன் கூறியது:

மார்க்கண்டேயர் அனைத்து சிவ தலங்களையும் வழிபட்டுவிட்டு திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தந்ததாகவும், அங்கு அவர் பூஜை செய்யும் போது தீர்த்தம் எடுப்பதற்கான பாத்திரம் இல்லாததால் அவர் பூஜைக்குரிய தீர்த்தப் பாத்திரம் வேண்டி சிவனை நினைத்ததாகவும், அப்போது சங்குதீர்த்தக்குளத்தில் ஒரு அற்புதமான சங்கு கரை ஒதுங்கியதாகவும், அச்சங்கை சிவபெருமானே பூஜைக்கு கொடுத்து அருள் புரிந்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.

இதனையடுத்து 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்குதீர்த்தக் குளத்தில் சங்கு உருவாகிறது. இதனை புனித சங்காக பூஜையில் வைத்து பூஜித்து வருவதாகவும், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில் வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்போது சங்குதீர்த்தக்குளத்தில் உருவாகும் புனித சங்கு பூஜையில் முதன்மைபெறும்.

இதற்கு முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு ஆடி பூரம் தினத்தில் சங்குதீர்த்தக்குளத்தில் புனித சங்கு உருவானது. இதனையடுத்து 12 ஆண்டுக்குப் பிறகு தற்போது விநாயகர் சதுர்த்தியான வியாழக்கிழமை சங்குதீர்த்தக்குளத்தில் புனித சங்கு கரை ஒதுங்கியது. புனித சங்குக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, சதுரங்கப்பட்டினம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித சங்கை கண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

பாரீஸில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்து 14 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னமும் பிரிட்டிஷ் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் இளவரசி டயானா. பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் இன்னமும் டயானாவைத்தான் மக்கள் பெரிதும் நேசிக்கின்றனர். இன்று அவர் உயிருடன் இருந்தால், வேல்ஸ் இளவரசியாக வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது என்று பிரிட்டிஷ் மக்களில் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
அவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் மக்கள் கருத்துக் கணிப்பில் 7வது இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு 4 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. அரசர் 8-வது ஹென்றி, ராணி விக்டோரியா, இளவரசர் ஹாரி ஆகியோர் இவர்களுக்கு முன்பு உள்ளனர். ஆனால் சார்லஸின் மனைவி கமீலா கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். பிரிட்டன் மக்கள் பெரிதும் விரும்புவோர் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் டயானா உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நகைச்சுவை நடிகர் ஸ்டீபன் ஃபிரை, ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் மக்கள் மனதில் இடம்பிடித்த பிறர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிரிட்டன் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சாஃப்ட்வேர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்கைப் நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது.

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com