
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் சிரேஷ்ட பத்திரிகையாளரான நாகசுந்தரம் குகநாதன் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த ஒரு குழுவினரால் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் கடுமையாகத் தாக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொது மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலுவலகத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தலைக்கவசம் அணிந்தவாறு வந்த இருவரே தம்மிடமிருந்த கம்பியினாலும், பொல்லினாலும் குகநாதனை சரமாரியாகத் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். தலையில் படுகாயமடைந்த குகநாதன் இரத்தம் பெருக்கெடுத்த நிலையில் யாழ். வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நிலைமை ஆபத்தானதாக இல்லை எனவும், தற்போது அவர் உரையாடக்கூடியவராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள் பலரும் அவரைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக