செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

09.08.2011 இன் சிறு அதிசய செய்திகள்

*புலம்பெர்தமிழ் மக்கள் லண்டனின் கலவரத்தால் இடப்பெயர்வு!
லண்டனில் வெடித்துள்ள கலவரம் தற்போது பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. லண்டன் ஹக்னிப் பகுதியில் வெடித்த கலவரம் குரொய்டன் பகுதிக்கும் பரவியுள்ளது. அதனை அண்டிய பகுதிகளான டூட்டிங், மிச்சம் மற்றும் பேளி போன்ற பகுதிகளுக்கும் கலவரம் பரவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப் பகுதியில் பெருமளவான ஆபிரிக்கர்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. இப் பகுதிகளில் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு மத்தியில் பெரும் பதற்றம் தோன்றியுள்ளது. அவர்கள் வீடுகளும் சூறையாடப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல தமிழர்கள் தமது உடமைகளுடன்வெளியேறி (இடம்பெயர்ந்து) உறவினர் வீடுகளில் தங்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரித்தானியப் பிரதமர் அவற்றை உடனடியாக ரத்துச்செய்து நாடு திரும்பியுள்ளார் என பி.பி.சி செய்திச் சேவை சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

கலவரத்தில் ஈடுபட்டுள்ள ஆபிரிக்கர்கள் ஸ்போட்ஸ் கடைகளை, சென்ட் விற்கும் மற்றும் மெபைல் போன்கள் விற்கும் கடைகளை உடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரோட்டில் உள்ள சில வாகனங்களை எரியூட்டும் இவர்கள் அதனைப் பயன்படுத்தி அருகில் உள்ள கடைகளை உடைத்து அக்கடைகளில் உள்ள பொருட்களைக் சூரையாடுகின்றனர்.


11 வயதுச் சிறுவன் ஒருவன் உடைக்கப்பட்ட கடைகளுக்குள் இருந்து பெருவாரியான சிகரெட்டுகளை எடுத்துசெல்லும் காட்சிகளை பி.பி.சி ஒளிபரப்பியுள்ளது.

ஆபிரிக்க இனத்தவர் ஒருவரைப் பொலிசார் கடந்த வியாழன் அன்று சுட்டுக்கொன்றதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் தொடக்கி வைத்த இந்தக் கலவரம் தற்போது லண்டனின் பல பாகங்களுக்கு பரவியுள்ளது மிகவும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சுயாதீனமான பொலிஸ் முறைப்பாட்டு ஆணையம் ஒன்று விசாரணை நடத்திவருகின்றது.

லண்டனில் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான டோட்டன்ஹாம், அடிக்கடி இனரீதியான குழப்பங்கள் வெடிக்கக்கூடிய இடமாக இருந்து வந்துள்ளது.

அங்கு வாழ்கின்ற ஆபிரிக்க கறுப்பினச் சமூகத்தில் சிலரிடத்தில், தமது இளைஞர்களுக்கு போதுமான வாய்ப்புகள் இல்லையென்ற கவலையும் இருக்கின்றது.

சமீபத்தில் லிபியாவிலும் எகிப்து மற்றும் சிரியா போன்ற நாடுகளில் கிளர்ச்சியாளர்களைத் தூண்டி விட்டு, அந்தலைவர்களைப் பதவியிறக்க மேற்குலக நாடுகள் அப்போராட்டங்களையும் கலவரங்களையும் ஒரு சாட்டாகப் பயன்படுத்தியது. அதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் உதவிசெய்தது.

ஆனால் தற்போது பிரித்தானியாவில் இவ்வாறானதொரு கலவரம் மூண்டுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் பொலிசாரால் சுடப்பட்ட ஆபிரிக்க இனத்தவரா இல்லை வெளிநாடு ஒன்று இச் சம்பவத்தைப் பாவித்து பிரித்தானியாவில் கலவரத்தை ஊக்குவிக்கிறதா என்ற கேள்விகளும் இங்கே எழுகின்றன.
எது எவ்வாறெனினும், சொந்த நாட்டில்தான் இடம்பெயர்ந்து இன்னல்களை அனுபவித்தோம். புகலிடம் தேடி வந்த நாட்டில் நிம்மதியாக வாழ வந்த நாட்டிலும் இடம்பெயர்வா? என தமிழ் மக்கள் அங்கலாய்க்கின்றார்கள்.


*இந்தியப் பெண்ணொருவருக்கு வெவ்வேறு தனித்தனி கருப்பை மூலம் இரண்டு ஆண்குழந்தைகள் பெற்றுள்ளார்!
இந்தியப் பெண்ணொருவருக்கு வெவ்வேறு தனித்தனி கருப்பை மூலம் இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்துள்ளது.

ஐம்பது மில்லியன் குழந்தைகளில் ஒரு குழந்தையே இவ்வாறு அரிதாக பிறக்கக்கூடியது. இவ்வாறானதொரு அரிதான பிரசவத்தின் மூலம் ரிங்கு தேவி என்ற தாய் வடக்கு நகரான பாட்னாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரு ஆண் குழந்தைகள பிரசவித்துள்ளார்.

உலகில் ஒவ்வொரு வருடமும் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு மத்தியில் மிக அரிதாக வெவ்வேறு கருப்பைகளில் ஆரோக்கியமான இரு குழந்தைகள் பிறந்துள்ளதை பார்த்து வைத்தியர்கள் அதிர்ச்சியுற்றுள்ளனர்.
தற்பொழுது கிடைத்த செய்தி [09.08.2011 am:00:45]
*புதுக்கடை: குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் கடல் சீற்றம்:5 படகுகள் சேதம்.

புதுக்கடை: குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் கடல் சீற்றத்தால் 5 படகுகள் சேதம் அடைந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடநத சில தினங்களாக பெரும்பாலான பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் எழும் இராட்சத அலைகளால் ஊருக்குள் தண்ணீர் புகுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தேங்காபட்டணம் பகுதியில் முள்ளூர்துறை, இராமன் துறை, இனயம் உள்ளி்ட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதம் இந்த பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படுவதை தடுக்க அலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் முள்ளூர் துறை பகுதியில் உள்ள அறையன் தோப்பில் மட்டும் சுமார் 50 மீ்ட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேங்காபட்டணம் கடல் பகுதியில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டது. கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 படகுகள் சேதம் அடைந்தன. 4 படகுகள் மாயமாகின. தொடர்ந்து அறையன் தோப்பு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்படாத பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து நேற்று அலையின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் மீனவர்கள் அச்சத்துடன் வீடுகளில் தங்காமல் மேடான பகுதியிலும், தேவாலங்களிலும் தங்கியுள்ளனர்.



உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக கத்தார் நாட்டு மன்னரின் மனைவி ஷீகா மொஸா பிந்த் நாசர் தேர்வு செய்யபப்பட்டுள்ளார்!
!

உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக கத்தார் நாட்டு மன்னரின் மனைவி ஷீகா மொஸா பிந்த் நாசர் தேர்வு செய்யபப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற பேஷன் பத்திரிக்கைளில் ஒன்று வானிட்டிபேர். இந்த இதழின் வாசகர்கள் சேர்ந்து உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக மொஸாவைத் தேர்வு செய்துள்ளனர்.

இஸ்லாமிய உலகைச் சேர்ந்த ஒரு பெண் இந்தப் பெருமையைப் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

கத்தார் நாடு ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதிலும் மொஸா புர்கா அணிவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அழகழகான உடைகளையும், பேஷன் டிசைனர் உடைகளையும் அணிவது வழக்கம்.

அடிப்படை மற்றும் உயர் கல்விக்கான யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதுவராகவும் அவர் இருக்கிறார்.

உலக அளவில் சிறந்த முறையில் டிரஸ் செய்யும், ஸ்டைலான பெண்மணிகள் வரிசையில் அவருடன், பிரெஞ்சு அதிபரின் மனைவி கார்லா ப்ரூனி, மொனாக்கோ நாட்டு இளவரசி சார்லீன் ஆகியோரும் இணைந்து தேர்வாகியுள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஒரு கருத்துக் கணிப்பிலும் மொஸாவின் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



லண்டன் மாநகரில் 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தின் இசை வெளியீடு மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
யூலை 31, 2011 ஆம் திகதியன்று , லண்டன் மாநகரில் 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தின் இசை வெளியீடு மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இவ்விசை வெளியீட்டு விழாவில், நோர்வேயில் இயங்கும் Global Media Invest As நிறுவனத்தின் முதல் படைப்பான 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தினை இயக்கிய திரு.புகழேந்தி தங்கராஜ், திரு. சத்யராஜ், திருமதி சங்கீதா கிரிஷ், இசையப்பாளர்இமான் மற்றும் பாடகர்கள் பல்ராம், கிரிஷ் மற்றும் மாதங்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இசை வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்றீபன் புஸ்பராஜா அவர்கள், “தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில் நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாக கொண்டே இத்திரைப்படத்தினை இயக்குநர் புகழேந்தி அவர்கள் நெறிப்படுத்தியுள்ளார் என்றும், எமது தமிழீழ மக்களின் துயரம் படிந்த வாழ்வினை இவ்வுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கினை,புகழேந்தி அவர்கள் திரைப்படைப்பின் ஊடாக வெளிக்கொணர முயற்சி எடுத்தவேளையிலேயே, அவரது பணிக்கு உரம் ஊட்டும் வகையில், Global Media Invest Asஅவருடன் களமிறங்கியது” என்றும் குறிப்பிட்டார்.
திரைப்பட இயக்குனர் திரு.புகழேந்தி. தங்கராஜ் அவர்களின் உரை ,உணர்வுபூர்வமாக அமைந்ததை, பார்வையாளர்கள் வெளிப்படுத்திய கரகோஷங்கள் புலப்படுத்தின.

மரணங்களைக் கடந்த நீண்ட பயணத்தில், பெரும் வலி சுமந்து செல்லும் ஈழ மக்கள் எதிர்கொண்ட அவலத்தின் சில பக்கங்களை, இத்திரைப்படத்தின் ஊடாக, உலகின் முன் சாட்சியப்படுத்த தான் முயற்சிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழீழ மக்களின் துயர் நிறைந்த வாழ்வுச் சூழலையும், போராட்டத்தின் நிஜமான வரலாற்றினையும் ஆழமாகப் புரிந்து கொண்டவர் என்பதனை புகழேந்தி அவர்களின் நீண்ட உரை வெளிப்படுத்தியிருந்தது.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் அவர்கள், 'தென் தமிழீழத்தில் ஒரு சிறுமிக்கு நடந்த இந்த பாலியல் வன்கொடுமை, பேரவலத்தின் ஒரு சிறு குறியீடாகப் பார்க்க வேண்டுமெனவும், இத் திரைப்படத்தில் தான் நடித்ததையிட்டு பெருமையடைவதாகக் கூறினார். அத்தோடு உலகின் 194 வது நாடாக தமிழீழம் என்கிற தேசம் உதயமாகும் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் டி. இமான் அவர்கள் உரை நிகழ்த்துகையில் ,'இத் திரைப்படம் தொடர்பாக திரு.புகழேந்தி அவர்கள் தன்னைத் தொடர்பு கொண்டு,திரைக்கதையை விபரிக்கும்போது , தான் கண்ணீர் சிந்தியதாகவும், அத்தோடு முதல் முதலாக 'உணர்ச்சிக் கவி ' காசி ஆனந்தன் அவர்களோடு இப்படத்தில் பணியாற்றியதை,வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

இத்திரைப்படத்தில், உணர்ச்சி கவிஞர் வரிகளில் ‘உச்சிதனை முகர்ந்தால்’, மற்றும் ‘இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ’ என இருப்பாடல்களும், கவிஞர் கதிர்மொழியின் வரிகளில்‘சுட்டிப் பெண்ணே சுட்டிப் பெண்ணே’, , மற்றும் ‘ஏனோ ஏனோ’ என நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இசை வெளியீட்டிற்கு வந்திருந்த மக்கள் அனைவரும் பாடல்களின் இசையாலும் கவித்துமான வரிகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தனர்.

'இருப்பாய் தமிழா..'என்கிற பாடல் இருதடவைகள் ஒலி பரப்பப்பட்ட போது, முழு அரங்கமும் உணர்வுப் பிழம்பாகக் காட்சியளித்ததை காணக்கூடியதாக இருந்தது.


கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com