
மக்களின் இன்றியமையாத தேவைகளை நிறைவு செய்யும் வகையில், சில பொருட்களை விலையின்றி அரசு வழங்கி வருவதை இலவசம் என கொச்சப்படுத்த விரும்பவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.
நாட்டின் 65வது சுதந்திர தினத்தையட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதா, பின்னர் சுதந்திர தின உரையாற்றினார்.
அவர் தனது உரையில், "வரலாற்று சிறப்புமிக்க இந்த புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்திலிருந்து பாரதத் தாயின் மணிக்கொடியை ஏற்றி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன். ஆங்கிலேயரிடம் இருந்து நாம் விடுதலைப் பெற்று 64 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 65-வது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த இனிய வேளையில், வங்கக் கடலோரம் வீசும் மெல்லிய பூங்காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் இந்த மணிக்கொடி, ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியாம் இந்த சுதந்திரம் பற்றிய பல்வேறு உணர்வுகளை இத்தருணத்தில் நம்முள்ளே கிளர்ந்தெழச் செய்கிறது.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாகச் செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நம் தமிழகம். வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமையும் பெற்றது நம் தமிழகம். நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தங்களின் சொந்த நலன்களைக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் நாட்டு விடுதலைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அந்தத் தியாகச் செம்மல்களை நினைவு கூறும் திருநாள் இது.
அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து, வறுமையில் வாடுவோர் வளம் பெற்று, அனைத்துத் தரப்பு மக்களும் அச்சமின்றி வாழ்வதுதான் உண்மையான சுதந்திரம். அந்த வகையில், இந்த சுதந்திரத் திருநாள், தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் தன்னிகரில்லாத் திருநாள். தமிழக மக்களின் முகங்களில், ஊற்றெடுக்கும் மகிழ்ச்சியை காண்கின்ற திருநாள். 64 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை இன்று கொண்டாடி மகிழும் அதே வேளையில், தங்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிமைப்படுத்தி இருந்த விலங்கு தற்போது தகர்த்தெறியப்பட்டுள்ளதைத் தமிழக மக்கள் உவகையுடன் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு துறையிலும் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையே அச்ச உணர்வில்தான் கழிந்தது. எனவேதான், ஐந்து ஆண்டு கால கொடுங்கோல் குடும்ப ஆட்சி ஒழிந்து, அ.தி.மு.க.வின் மக்களாட்சி மலர்ந்தவுடன், மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைத்த உணர்வு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்கள் சந்தித்த மிக முக்கியமான பிரச்னை சட்டம் - ஒழுங்கு சீரழிவு. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக்காடாக மாற்றினார்கள் முந்தைய ஆட்சியாளர்கள். இதனை சீர்செய்யும் விதமாக சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டவும், நிர்வாகத்தை செம்மையாக்கவும் எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம், காவலர்கள் தங்கள் பணிகளில் எத்தகைய குறுக்கீடும், இடையூறும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு, மக்களுக்கான தங்கள் கடமையை செவ்வனே செய்ய வழிவகை ஏற்படுகிறது. அப்போதேல்லாம் சமூக விரோதிகள் மீதும், தீவிரவாதிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அதே போன்று, தற்போதும், சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டி, மக்கள் எவ்வித பயமும் இன்றி அமைதியாக தங்களது வாழ்க்கையை நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் எடுத்து வருகிறது.
ஒரு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக நிலைநாட்டப்பட வேண்டும் எனில், அந்த மாநிலத்தில் காவலர்கள் தங்கள் பணிகளில் எந்தவித குறுக்கீடும் இன்றி, தங்கள் பணிகளை நியாயமாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும்.
கடந்த 5 ஆண்டு காலமாக சமூக விரோதிகளைக் கண்டு காவலர்கள் அஞ்சிய துர்பாக்கியமான சூழ்நிலையை தலைகீழாக மாற்றி, சமூக விரோதிகள் காவலர்களைக் கண்டு அஞ்சும் சூழ்நிலையை நான் பொறுப்பேற்ற உடனேயே மீண்டும் உருவாக்கி உள்ளேன் என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப் பட்டிருக்கிறேன். எல்லோரும், எல்லாமும் பெற்று, வாழ்வில் வளம் பெறும் வகையிலான ஆட்சி அமைவதே சிறந்த மக்களாட்சி ஆகும். இவ்வாறான மக்களாட்சியில்தான், ஏழைகளும், வசதி படைத்தோருக்கு இணையான வசதிகளைப் பெற இயலும். எனவே தான், மூன்றாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பேற்றுள்ள இத்தருணத்தில், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் வாழ்வில் வளம் ஏற்படும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை எனது அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது.
வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகளில் அனைத்து தரப்பு மக்களும் தன்னிறைவு பெறுவது ஒரு சிறந்த பொருளாதாரக் கோட்பாடாகும். அந்த வகையில், மக்களின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், சில பொருட்களை, விலை இன்றி, எங்கள் அரசு வழங்கி வருகிறது. விலையின்றி இவ்வாறு வழங்குவதை "இலவசம்" என்று நாங்கள் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
ஏழை, எளியவர்களுக்கு இவ்வாறு பொருட்களை விலை இன்றி வழங்குவது மக்கள் நலன் பேணும் அரசின் கடமை ஆகும்.
இது நிரந்தரத் தீர்வல்ல...
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசே வழங்கும் அதே நேரத்தில், இது ஒரு நிரந்தரத் தீர்வு என்று எனது அரசு கருதவில்லை.
மக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைக்கு அரசை எப்போதும் சார்ந்து இராமல் தங்கள் சொந்தக் கால்களிலேயே நின்று, தங்களுக்குத் தேவையானதை தாங்களே வாங்கிக் கொள்ளும் அள விற்கு அவர்களது பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான் எனது தலைமையிலான அரசின் எண்ணம் ஆகும்.
ஏழைகள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வேண்டுமெனில், ஏழை, எளிய மக்களைப் பொருளாதார நடவடிக் கைகளில் ஈடுபடச் செய்து, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவது மக்கள் அரசின் கடமை ஆகும்.
இந்த அடிப்படையில், ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் உன்னத நோக்கத்தோடு, வரும் ஐந்து ஆண்டுகளில் 7 லட்சம் ஏழை, எளியோருக்கு தலா 4 ஆடுகள் வழங்கும் திட்டத்தை, அதாவது 28 லட்சம் ஆடுகள் வழங்கும் திட்டத்தை எனது அரசு செயல்படுத்த உள்ளது.
என்னுடைய சிந்தனையில் உதித்த ஒரு சிறப்பான திட்டம் தான், 1992-ல் சேலம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட 'தொட்டில் குழந்தைத் திட்டம்' ஆகும்.
2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பில், கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் கவனிக்கத்தக்க வகையில் இறங்கு முகமாக உள்ளதால், இந்நேர்வில் அரசின் தனிக்கவனம் தேவைப்படுவதை உணர்ந்து, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப் புரம் மற்றும் திருவண் ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் தொடங்க எனது அரசு சமீபத்தில் ஆணைப் பிறப்பித்துள்ளது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கக் கூடிய பல புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் அன்பையும், ஆதரவினையும் பெற்றுள்ள நான், தமிழக மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அல்லும் பகலும் அயராது உங்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.
இலவச அரிசி திட்டம், கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டங்கள், தாய்மார்களுக்கு கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் வழங்கும் திட்டம், இலவச லேப்-டாப் என தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் முதல்வர் தனது உரையில் விரிவாக எடுத்துக் கூறினார்.
பின்னர், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் சங்கீதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு அவர் விருது வழங்கி கௌரவித்தார்.
பின்னர் கோட்டை நுழைவாயில் அருகே உள்ள பந்தலில், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்புகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
மது போதையில் வாகனம் ஓட்டிச் சென்ற 21 வயதுப் பெண் நடைபாதையில் கடந்து கொண்டிருந்த நால்வரை மோதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வெள்ளி இரவு Montpellier (Hérault)ல் மது போதையில் வாகனம் ஓட்டிச் சென்ற 21 வயதுப் பெண் நடைபாதையில் கடந்து கொண்டிருந்த நால்வரை மோதியுள்ளார். அதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மரணத்தோடு போராடிக் கொண்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது லிட்டருக்கு 2.4கிராம் alcohol இரத்தத்தில் இருந்துள்ளது.
இவர் அதி வேகமாக மது போதையில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு 5 வீதிச் சிவப்பு விளக்குகளையும் நிற்காது கடந்து வந்து மோதி யுள்ளார்.
விசாரணையில் தனக்கு மன அழுத்தங்கள் இருந்ததாகவும் தனது பரிதாப நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு நீதிபதி இவர் துன்பம் அனுபவித்ததாகச் சொல்லுகின்றார், ஆனால் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்கள் அடைந்திருக்கும் துன்பங்களுக்கு முன்னால் வேறெதுவும் துன்பமில்லை என்று கூறியுள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை ஒரு நிகழ்ச்சி முடித்துக் கொண்டு மேலும் மூவரை ஏற்றிக் கொண்டு மதுபோதையில் வந்த பெண், பாதசாரிகள் மீது மோதியுள்ளார்.
அதில் விபத்திற்குள்ளான 26 வயது இளைஞன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே மரணமானார். அவரது 27 வயதுடைய தோழர் தலையில் பலமாக அடிபட்டுக் கோமா நிலையை அடைந்துள்ளார். இவர் மரணத்தோடு போராடிக் கொண்டுள்ளார். மற்றுமொருவரும் 27 வயதுடையவர் அவர் கை மற்றும் எலும்பு முறிவுகளுக்கு உள்ளாகியுள்ளார். நான்காமவர் மட்டும் காயங்கள் பெரிதளவிலின்றித் தப்பியுள்ளார். விசாரணைகளின் பின்னர் சிறையிலிடப்பட்டிருக்கும் பெண் சாரதிக்கு 10 வருட சிறைத்தண்டனை அளிக்கப்படலாமென காவற்துறைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மது போதையும் மற்றவர்கள் பற்றிய அக்கறையின்மையும், நண்பர்கள் சேர்ந்து விட்டால் அவர்களுக்குக் காட்டும் வீரசாகசமும் வாழ்க்கையையே அடியோடு புரட்டிப்போட்டுவிடும். 21 வயதுப் பெண்ணின் மதுபோதை அவரின் அளமைக்காலததைச் சிறக்கம்பிகளுக்குப் பின்னால் முடக்கிவிடப் போகின்றது.
"குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி உயிரிழப்பவர்களை விட, மாசுபட்ட கங்கை நதி தண்ணீரைப் பயன்படுத்துவதால், அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்'':அத்வானி.
""குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி உயிரிழப்பவர்களை விட, மாசுபட்ட கங்கை நதி தண்ணீரைப் பயன்படுத்துவதால், அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன் இணையதளத்தில் கூறியுள்ளதாவது: கங்கை நதி நீர் மாசுபடுவது, அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது, கவலை தரும் விஷயம். கங்கை நதியின் கரையோரங்களில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், மாசுபட்ட கங்கை நதி நீரைப் பயன்படுத்துவதால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புச் சம்பவங்களில், குறைவான எண்ணிக்கையில் தான் உயிர்ப் பலிகள் நிகழ்கின்றன.
இது, உலக அளவில் பெரிய செய்தியாக வெளியிடப்படுகிறது. ஆனால், மாசுபட்ட கங்கை நதி நீரை பயன்படுத்துவதால், பெரும் எண்ணிக்கையில் உயிர்பலி நிகழ்கிறது. அது, வெளியில் தெரியாமல் போகிறது. இந்த நிலை மாற வேண்டும். நகரமயமாதல், தொழில்மயமாதல் போன்ற காரணங்களால், கங்கை நதி தொடர்ந்து அசுத்தமடைகிறது. இது குறித்த எந்தவித விழிப்புணர்வும் இல்லாததால், காசி போன்ற இடங்களில், மக்கள் நீராடி வருகின்றனர். கங்கை ஆற்றுப் படுகைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களாலும், மக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
எனவே, கங்கை நதியைச் சார்ந்து வாழும், நதியோர கிராம மக்களுக்கு, உரிய தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை, சுத்தமான குடிநீர் மற்றும் வீட்டிற்கு ஒரு மரம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், கங்கை நதி நீர் மாசுபடுவதை தடுப்பதோடு, மாசடைந்த நீரால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க முடியும். இவ்வாறு, அத்வானி கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் சுதந்திர தின விழாக்களை சீர்குலைக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 10 பேர் பலியாகினர்.
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 14-ம் தேதி சுதந்திர தின விழாவை பாகிஸ்தான் கொண்டாடி வருகிறது. இதன்படி நேற்றும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் உள்ள மீரான்ஷா நகரில் உள்ள ராணுவ முகாம் அருகே சுதந்திர தின விழா நடந்தது. அப்போது நடந்த பேரணியில் தலீபான் தீவிரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 22 பேர் காயம் அடைந்தனர்.
இது தவிர பலுச்சிஸ்தான் மாநிலம் டெரா அல்லா யார் நகரில் சாலையோர ஓட்டல் ஒன்றின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்தது. இதில் அந்த ஓட்டல் இடிந்து விழுந்தது. அதன் அருகில் உள்ள கடைகளும் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். 25பேர் காயம் அடைந்தனர்.
இதேபோல் மேலும் சில இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக