வியாழன், 25 ஆகஸ்ட், 2011

25.08.2011 இன் சிறப்பு செய்திகள்.

பிறந்து ஒரு நாள் மாத்திரமே கழிந்து தொப்புல் கொடிகூட விழாமல் இருந்த குழந்தை கழுத்து நெரித்து கொலை!

பிறந்து ஒரு நாள் மாத்திரமே கழிந்து தொப்புல் கொடிகூட விழாமல் இருந்த பச்சிளம் குழந்தையொன்று கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று ஹட்டன் நோர்வூட் நிவ்மெலிவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 21ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து நோர்வூட் பொலிஸாருக்கு நேற்றைய தினமே முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்து காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏற்பட்ட சந்தேகத்தால் சடலம் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிரேத பரிசோதனை நிறைவில் குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலபிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நோர்வூட் பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிரிகளுக்கு பாடம் புகட்டும் தந்திரமாகவே பின்வாங்கியுள்ளேன். இணைய தள டிவியில் கடாபி!

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கடாபிக்கு எதிராக பிப்ரவரியில் புரட்சி வெடித்தது. இதுவரை அதை ராணுவ உதவியுடன் கடாபி ஒடுக்க முயன்று வந்தார். ஆனால், கடந்த ஞாயிறன்று தலைநகர் திரிபோலியை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். அதிபர் மாளிகை குண்டு வீசி தரை மட்டமாக்கப்பட்டது. எனினும், கடாபி பிடிபடவில்லை.

அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்துவதாக கிளர்ச்சி படையினர் கூறி வரும் நிலையில், தனது மகன் சைப் அல் இஸ்லாம் நடத்தும் இணைய தள டிவியில் கடாபி திடீரென தோன்றினார். ‘‘எதிரிகளுக்கு பாடம் புகட்டும் தந்திரமாகவே தலைநகரில் இருந்து பின்வாங்கியுள்ளேன். எதிரிகளிடம் லிபிய ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர்.

தலைநகர் திரிபோலியை நாங்கள் இன்னும் இழந்து விடவில்லை’’ என்று பேட்டியில் கூறினார்.இதற்கிடையே, திரிபோலியில் கடந்த சில நாட்களாக நடந்த உச்சக்கட்ட மோதலில் 400 பேர் பலியானதாகவும், 2,000 பேர் வரை காயமடைந்ததாகவும் புரட்சி படையின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் தெரிவித்தார். கடாபி பிடிபட்டதும் லிபியாவிலேயே அவர் மீது விசாரணை நடத்தி தண்டனை விதிக்கப்படும் என்றார் அவர்.

அமெரிக்க கோழி போட்டிருக்கும் முட்டை, உலகிலேயே மிக சிறியது என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் கோழி பண்ணை வைத்திருப்பவர் டோனி ருசெல். பண்ணையில் உள்ள கோழி ஒன்று மிக மிக சிறிய முட்டை போட்டிருக்கிறது. இதையடுத்து, கின்னஸ் சாதனைக்காக ருசெல் விண்ணப்பித்தார். முட்டையை கின்னஸ் அதிகாரிகள் போட்டோ எடுத்து சென்றுள்ளனர். இதுபற்றி ருசெல் கூறியதாவது:

பூனைகள், பல்வேறு இன பறவைகள், வாத்துகள் என பல்வேறு உயிரினங்களை நானும் மனைவியும் வளர்த்து வருகிறோம். முட்டைகள் சேகரிப்பதற்காக ஒருநாள் கோழி பண்ணைக்கு சென்றேன். வழக்கமான முட்டையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு அளவே ஒரு முட்டை இருந்தது. 2.1 செ.மீ. நீளம், 3.46 கிராம் எடைதான் இருந்தது. கண்ணையே நம்பமுடியவில்லை.

அது கோழி முட்டையாக இருக்காது என்று நினைத்து மனைவியிடம் காட்டினேன். கோழி முட்டைதான் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தேன். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com